பார்த்த,படித்த செய்திகள்

வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

Thursday, February 27, 2014

நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய வில்லங்க சான்றிதழ் அவசியம். வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப்  பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழின் அவசியம் என்ன?
வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள்  பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
1.சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தேத் தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும்  உள்ள  எல்லா பத்திரங்களையும்  சரி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
 வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெறலாம்.
 விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் ஆகியன கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் பெற முடியும்?
பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.
கட்டணம் எவ்வளவு?
பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கு ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பத்திரபதிவு அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிவரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். கட்டண விவரங்களை http://www.tnreginet.net/igregn/webAppln/indexFee.asp இதில் தெரிந்துகொள்ளலாம்.
பின்வரும் இணைப்பில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம்.   ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ஒருரூபாய் மட்டுமே.
தமிழில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1  ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 இந்த இணைப்பில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்கள் முகவரிக்கும் அனுப்பச் சொல்லலாம். அதற்குரிய தபால் செலவை தபால் கிடைக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
விண்ணப்பத்தின் நிலையறிய http://www.tnreginet.net/webec_status_public.asp இந்த இணைப்பில் செல்லவும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் http://www.tnreginet.net/english/dro_list.asp  இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுக்கு முகவரிக்கு நேரடியாக மேலும் விவரங்களை http://www.tnreginet.net/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ளமுடியாத சில தகவல்கள்:
  • சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
  • 1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
நன்றி – புதிய தலைமுறை 
              இவள் பாரதி
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP